நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது.. அந்த வகையில் இந்தியாவில் சராசரி ஒரு நாள் பாதிப்பு 10,000-க்கும் மேல் பதிவாகி வருகிறது.. எனவே கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. கடந்த சில நாட்களாக 2500-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது..
மேலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளான மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை கழுவுவது போன்றவற்றை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது..
இந்நிலையில் சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.. கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.. மேலும் வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.. மேலும் திரையரங்குகள், துணிக்கடைகள், வணிக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் முகக்கவசம் அணியாதவர்களும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில் சென்னையில் முகக்கவசம் அணியாமல், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. ஆனால் பலரும் முகக்கவசம் அணியாமல் வருவதால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது..