சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை வானகரத்தில் இருக்கும் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார். அப்போது இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அதிமுகவினர் பதினொரு பேரும், போலிசார் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அதிமுக தலைமை அலுவலகம் இருக்கும் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டையில் உள்ள போலிஸ் ஸ்டேஷனில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் வருவாய் துறையினர், போலீசாருடன் ஆலோசனை நடத்தினர் . இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் போலீசாருடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர் இந்நிலையில் வருவாய் துறையை சேர்ந்த வருவாய் கோட்டாட்சியர், ஓ.பன்னீர்செல்வத்திடம் சீல் வைப்பதற்கான நோட்டீசை வழங்கிய பிறகு, தாசில்தார் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இந்த நடைமுறை 145 குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவின் அடிப்படை ஆகும். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட சில மணி நேரத்தில், அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது, தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.