கோலிவுட்டில் வளர்ந்து வரும் ஹீரோவான நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை தந்து தற்போது முன்னணி ஹீரோவாக உயர்ந்து உள்ளார். டாக்டர் மற்றும் டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து டோலிவுட் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில், ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படம், தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அயலான் படமும் திரைக்கு வர காத்திருக்கிறது.
இந்நிலையில் “மண்டேலா” படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியிட்டுள்ளது படக்குழு. 1986ல் ரஜினி நடித்த படத்தின் டைட்டில் “மாவீரன்”, இதே டைட்டிலை 2009ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் ராம்ச்சரன் நடிப்பில் வெளியான மகதீரா படத்தின் தமிழ் ஆக்கமும் மாவீரன் என்றே வந்தது. இந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ’மாவீரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை படக்குழு பிரத்யேக சண்டைக்காட்சி வீடியோ மூலம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.