திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய ஆண் நண்பரை 30 இடங்களில் கத்தியால் குத்திக் கொலை செய்த பேராசிரியை கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பெருமாள்புரத்தில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ரதீஷ்குமார் என்பவர் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். அங்கு, மதியம் 3 மணி அளவில் பதிவேட்டு அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ரதீஷ்குமாரை பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசாரின் விசாரணையில், முறையற்ற காதல் விவகாரத்தில் இந்த படுகொலை சம்பவம் அரங்கேறியிருப்பது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட ரதீஷ்குமார் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த திருமணமான ஷிபா என்ற பெண்ணுடன் எல்லை மீறி பழகி வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ரதீஷ்குமார் அளித்த வாக்குறுதியை நம்பிய ஷிபா, கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து இருந்துள்ளார். ஆனால், ரதீஷ்குமாரோ அவருக்குத் தெரியாமல் கடந்த ஆண்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த ஷிபா தன் வாழ்க்கையை சீரழித்த ஆத்திரத்தில் ரதீஷ்குமாரை கத்தியால் சரமாரி குத்திக் கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷிபாவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, தான் கொண்டு வந்த தூக்க மருந்து கலந்த உணவை உண்டு ரதீஷ் மயக்க நிலையை அடைந்ததாகவும், அப்போது தன்னிடம் இருந்த கத்தியால் அவரது உடலில் 30 இடங்களில் குத்தியதாகவும் ஷிபா தெரிவித்துள்ளார். ரதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து போலீசை வரவழைத்து நடந்த சம்பவத்தை கூறி தாம் சரண் அடைந்ததாகவும் ஷிபா கூறியுள்ளார்.