சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் உள்ளிடவற்றிற்கு விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் 1ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000 க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000 மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.30,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 59% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிக பட்ச கடனாக ரூ.10,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000 ஆண்டிற்க்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000 வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகப்பட்டசமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000 வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் (கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய , புத்த பாரசீக மற்றும் ஜெயின்) ஆகிய சிறுபான்மையினர் இனத்தவர்களுக்கு டாம்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களான தனி நபர் கடன் திட்டம் மற்றும் சுய உதவிக் குழுக்களான சிறு தொழில் கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் தருமபரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. சிறுபான்மையினர் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.