உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் குறைந்த பிறகு இரண்டாவது மற்றும் மூன்றாவது கொரோனா அலை பரவியது. இதனை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை வைரஸ் என்று குறிப்பிட்டனர். இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்பது பற்றி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வந்தனர். இதில் பெங்களூரை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஜூலை முப்பதாம் தேதி வரை நகரின் கழிவு நீர் ஓடைகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை முடிவுகள் தற்போது வந்துள்ளது. இந்த முடிவில், ஒமிக்ரான் வகை வைரஸ் கழிவு நீர் மூலம் பரவுகிறது என்று தெரியவந்துள்ளது. இதில் அதிக வீரியம் கொண்ட பி ஏ 2-10 வகை வைரஸ் கழிவு நீரில் 14.83 % அளவுக்கு இருப்பது தெரியவந்துள்ளது.
இதுபோலவே பிஏ 2 வகை வைரஸ் 10.49%, பி.1-1529 வகை வைரஸ் 5.1% அளவுக்கும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூருவில் 878 கழிவு நீர் மாதிரிகளை சேகரித்து எடுக்கப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இது பற்றி அவர்கள் மேலும் கூறும்போது, கடந்த மே மாதம் பிஏ 2-வகை வைரசின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இதுவே ஜனவரி மாதம் பிஏ 2-12 வகை வைரசின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இக்காலகட்டத்தில் 7 வகையான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது, என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.