சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் வருடம் டிசம்பர் 9ம் தேதி நசரத்பேட்டை பகுதியில் இருக்கும் தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நசரத்பேட்டை காவல்துறையினர், அவரது கணவர் ஹேம்நாத் மற்றும் சித்ராவின் பெற்றோர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான ஹேம்நாத் 60 நாட்கள் சிறையில் இருந்து பிறகு ஜாமினில் வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த அவர், சித்ராவின் மரணத்தில் அரசியல் புள்ளிகள் மற்றும் படைத்தவர்கள் என பலருக்கு தொடர்புள்ளதாக ஹேம்நாத் பேட்டி அளித்து பரபரப்பை கிளப்பினார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த நகர்வுகள் சித்ராவின் மரண வழக்கை மாற்றியமைத்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் தனக்கு எதிராக காவல்துறையினர், தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்யுமாறு ஹேம்நாத் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், ஹேம்நாத் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இருப்பதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என குற்றப்பத்திரிக்கை ரத்து செய்யுமாறு கோரிய ஹேம்நாத்தின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளவும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார்.