காஞ்சிபுரத்தில் ஒலி முகமது பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பாக அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலைக்கு யாரோ மர்ம நபர் காவி துண்டு அணிவித்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அப்போது அவர்கள் அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு அணிவித்ததை கண்டித்து திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காஞ்சிபுரம், வேலூர் சாலையில் போக்குவரத்து பாதித்தது. எனவே அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
தகவல் அறிந்தவுடன் காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து காவிதுண்டு அணிவித்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானம் செய்தனர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர். இருந்த போதிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடர்ந்து அங்கிருந்து செல்லாமல் அந்த இடத்திலேயே முகாமிட்டு இருந்ததால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால், அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது.
காந்தி சிலை, திருவள்ளுவர் சிலைகளுக்கு மற்றும் திருவள்ளூர் படங்களுக்கும் காவி துண்டு, காவி கலர் பூசிய விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்களிலும் விவாதம் நடந்து வருகிறது.