குன்றத்தூரில் உள்ள காலடிப்பேட்டை அம்பேத்கர் தெருவில் வருபவர் ரமேஷ்(45). இவர் ஒரு தனியார் கிளப்பில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அலமேலு(42). இவர் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது அலமேலு வேலையில்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இவர்களுக்கு மோனிஷா, வசந்தரா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று மகள்கள் இருவரும் காலையில் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளனர். வீட்டில் ரமேஷும் அவரது மனைவி அலமேலு மட்டும் இருந்துளனர். அப்போது வீட்டில் இருந்த அலமேலுவின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டி இருந்திருக்கிறது. உடனே கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றுள்ளனர். அதற்குள், ரமேஷ் கதவை திறந்து கொண்டு வெளியே வந்துள்ளார். வெளியே வந்ததும் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்.
அதன் பிறகு அங்கிருந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அலமேலு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்டு கிடந்த அலமேலு உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து அலமேலுவின் கணவர் தலைமறைவாக இருப்பதை அறிந்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் ரமேஷ் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
இதை தொடர்ந்து ரமேஷிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மனைவி நடத்தையில் சந்தேகத்தால் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் அலமேலுவை கொலை செய்ததாக கூறியுள்ளார். ரமேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் இந்த கொலை பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.