கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப், வட்டம் 30-ல் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் வசிந்து வந்தவர் வீரமணி (43). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபல ரவுடியான வீரமணி மீது நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள தெர்மல் காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் பத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு வீரமணியின் மனைவி மற்றும் குழந்தைகள் அவர்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர். வீரமணி தனியாக இரவு வீட்டில் தூங்கியுள்ளார். இன்று அதிகாலை சிலர் அவரது வீட்டிற்கு வந்து வீரமணியை சரமாரியாக வெட்டினர். இந்த தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்று காலை அவரது வீட்டில் இருந்து ரத்தம் வெளியே வழிந்துள்ளது. இதன் காரணமாக சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், அவரது வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது வீரமணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து, நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வீரமணியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நெய்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வீரமணியை கொலை செய்தவர்கள் பற்றியும் எதற்காக இந்த கொலை சம்பவம் நடந்தது என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.