அரியானா மாநிலம் குருகிராம் நகரின் செக்டார் 64 பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த தனியார் பள்ளியில் இன்று காலை 8.30 மணிக்கு காலை இறைவணக்கம் நடைபெற்றது. இறைவணக்கம் முடிந்தவுடன் அந்த பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவி வகுப்பறைக்கு சென்றுள்ளார்.
வகுப்பறைக்கு செல்லும் வழியில் அந்த சிறுமி திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதை கண்ட சக மாணவ, மாணவிகள் உடனடியாக ஆசிரியர்களிடம் கூறினர். இதை தொடர்ந்து மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை ஆசிரியர்கள் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.