தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகில் அண்ணாமலை அள்ளி அரசு மதுபான கடை முன்பு கடந்த 19-ஆம் தேதி வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பாலக்கோடு காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே இருக்கும் கருக்கனஅள்ளியை சேர்ந்த தொழிலாளி சூர்யா (41) என்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வந்தனர். காவல் துறை விசாரணையில் மாமியாரே மருமகனை கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து காவல்துறையினர் சூர்யாவின் மாமியார் காரிமங்கலத்தை சேர்ந்த சகுந்தலா (47) பிடித்து தீவிர விசாரணை செய்தனர். அப்போது அவர் காவல் துறை யினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனது மகள் சாமுண்டீஸ்வரி (32)க்கும் சூர்யாவுக்கும் கடந்த 17- வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். எனது மகள் சாமுண்டீஸ்வரி தர்மபுரியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். சூர்யா குடிபழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து மகளிடம் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தி வந்தார். இதுபற்றி எனது மகள் சொன்னாள். இதனால் சூர்யா இறந்து விட்டால் தனது மகள் நிம்மதியாக இருப்பாள் என கருதி சூர்யாவை காரிமங்கலம் மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த இரண்டு பேர் மூலம் கொலை செய்ய முடிவு செய்தேன்.
சம்பவத்தன்று அவர்களிடம் சூர்யாவுக்கு சாராயம் வாங்கி கொடுக்க கூலி பணம் கொடுத்து அனுப்பினேன். அதன்படி அவர்கள் சூர்யாவுக்கு சாராயம் வாங்கி கொடுத்தனர். பின்னர் போதை ஏறியதும் சூர்யா பைக்கில் கிளம்பினார். அப்போது கூலிப்படையை சேர்ந்த இரண்டு பேரும் சூர்யாவை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். இவ்வாறு காவல்துறையினரிடம் தெரிவித்தார். இதையடுத்து சகுந்தலாவை காவல்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் காவல்துறையினர் கூலிப்படையை சேர்ந்தவர்களை தேடி வருகின்றனர்.