சேலம் மாவட்டத்தில் பல்நோக்குப் பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பினை ஊக்குவிக்க ஏதுவாக உள்ளீட்டு மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தனது செய்தி குறிப்பில்; மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 2022-2023 ஆண்டு சட்டமன்றக் கூட்டத் தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானிய கோரிக்கையில் 13.04.2022 அன்று பல்நோக்குப் பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பினை ஊக்குவிக்க உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
250 முதல் 1000 ச.மீ அளவிலுள்ள பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன்வளர்ப்பினை மேற்கொள்ள ஏதுவாக மீன் குஞ்சு, மீன் தீவனம், உரங்கள் ஆகிய மீன்வளர்ப்பிற்கான உள்ளீட்டு பண்ணைப் பொருள்கள் மற்றும் பறவை தடுப்பு வசதிகள் ஆகிய மீன் வளர்ப்பிற்கான ஒரு அலகிற்கு ஆகும் செலவினம் ரூ.36,000/-ல் 50% மானியமாக ஒரு பண்ணைக் குட்டைக்கு ரூ.18.000/- வழங்கப்படும். மேற்கண்ட மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும்விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்பு நிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.