நொய்டா நகரில் வசிப்பவர் சுதா. இவரது கணவர் சுபாஷ் பல வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். சுதாவின் மகள்களான நிக்கி மற்றும் பல்லவிக்கு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்தார். ஆனால், சகோதரிகள் கல்யாணம் வேண்டாம் என கூறியுள்ளனர். இந்நிலையில், நொய்டா நகரில் செக்டார் 96 பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் 11-வது மாடியில் இருந்து அதிகாலையில் சகோதரிகள் இருவரும் கீழே குதித்துள்ளனர்.
மகள்களை வீட்டில் இல்லாததால் தாய் சுதா, தனது மகள்களை தேடி வெளியே வந்து பார்த்துள்ளார். அங்கு, சகோதரிகள் இருவரும் காயங்களுடன் கீழே கிடந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மூத்த சகோதரி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்றொரு பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வயது முதிர்வால் கல்யாணம் செய்து வைக்க சுதா முடிவு எடுத்துள்ளார். ஆனால், கல்யாணம் செய்ய பிடிக்காமல் இரு பெண்களும் இந்த முடிவை எடுத்துள்ளனர். கட்டாயப்படுத்தி தங்களுக்கு கல்யாணம் செய்து வைக்க தாயார் நினைத்ததால், அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். கல்யாணம் செய்ய பிடிக்காததால் சகோதரிகள் இருவர் தற்கொலை செய்து கொள்ள கட்டிடத்தில் இருந்து குதித்துள்ளது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.