காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை அடுத்துள்ள திருவேங்கடம் அவன்யூ பகுதியில் வசித்து வருபவர், பால் பிரபு தாஸ். இவருடைய மனைவி செல்வராணி, சின்ன காஞ்சிபுரம் சிஎஸ்சி மகளிர் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுடைய மூத்த மகன் வின்சென்ட் ஜான் பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வந்தார். இவருடைய இளைய மகன் பச்சையப்பன் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று 12-ஆம் வகுப்பு படிக்கும் இளைய மகன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். குடித்துவிட்டு வந்ததை தட்டி கேட்ட அவரது அம்மாவை அடித்துள்ளார். இரண்டாவது மகன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவருடைய அண்ணன் வின்சன் ஜான் தம்பியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. மது போதையில் இருந்த தம்பி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து அண்ணன் மார்பில் குத்தியுள்ளார். இதனால் வின்சென்ட் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவருடைய தாய் மற்றும் தம்பியும், வின்சன் ஜானின் உடலை எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுனர். கீழே தடுக்கி விழுந்ததில் எதிர்பாராத விதமாக சமையல் அறையில் இருந்த கத்தி குத்தி விட்டதாகவும் கூறி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், இறந்தவர் கத்திக்குத்தால் இறந்திருப்பதால், சந்தேகம் அடைந்த டாக்டர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதை தொடர்ந்து காவல்துறையினர் மருத்துவமனை மற்றும் வீட்டுக்கு சென்று விசாரித்த போது, மது போதையில் வந்த தம்பியை, தட்டி கேட்ட அண்ணனை கொலை செய்து, அதை மறைப்பதற்கு கீழே தடுக்கி விழுந்ததாகவும் கூறியுள்ளனர் என்று தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பள்ளி மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியரான அவரது தாயாருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது குறிப்பிட தக்கது.