உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உயரமான மலைகள், பசுமையான இடங்கள் மற்றும் கோவில்களைப் பார்க்க, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள். ஆனால், கோவில்கள், மலைகள் மற்றும் பசுமையால் அலங்கரிக்கப்பட்ட உத்தரகாண்டில் பயங்கரமான இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? இது போன்ற பல மர்மமான சம்பவங்கள் இங்கு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இங்கு பல பயமுறுத்தும் இடங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று சம்பாவாத் மாவட்டத்தின் லோகஹாட்டில் அமைந்துள்ள முக்தி கோத்தாரி என்ற இடம்.

இன்று முக்தி கோத்தாரி என்று அழைக்கப்படும் இந்த இடத்தில், ஒரு காலத்தில் ஒரு அழகான பங்களாவில் ஒரு பிரிட்டிஷ் குடும்பம் வாழ்ந்தது. பின்னர் அந்த குடும்பம் இந்த பங்களாவை மருத்துவமனையாக மாற்ற நன்கொடை அளித்தது. இந்த மருத்துவமனைக்கு மக்கள் தூரத்திலிருந்து தங்கள் சிகிச்சைக்காக வந்து சிகிச்சை பெற்றனர்.. ஆனால் ஒரு நாள் ஒரு புதிய மருத்துவரின் வருகையால் எல்லாமே மாறியது. ஏனெனில் அந்த மருத்துவர் நோயாளிகளைப் பார்த்த உடனே, அவர்கள் இறக்கப் போகும் நாள் மற்றும் தேதி ஆகிய இரண்டையும் சொல்வாராம்.
மருத்துவர் கணித்த அதே நாளில் நோயாளி இறந்துவிடுவார் என்று அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் மக்கள் இறக்கும் இடம் ஒரு ரகசிய அறையாக இருந்துள்ளது.. அந்த இடம் தான் முக்தி கோத்தாரி என்று அழைக்கப்பட்டது. தனது கணிப்பு தவறாகி விடக்கூடாது என்பதற்காக நோயாளிகளை முக்தி கோத்தாரிக்கு அழைத்துச் சென்று அந்த மருத்துவரே கொலை செய்ததாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்..

மருத்துவரால் கொல்லப்பட்ட நோயாளிகளின் ஆன்மாக்கள் தற்போது கூட முக்தி கோத்தாரி பகுதியில் அலைவதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு தொடர்ந்து அமானுஷ்ய சம்பவங்கள் நிகழ்வதாகவும், மர்மமான மற்றும் விசித்திரமான சத்தங்கள் கேட்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.. இதன் காரணமாகவே இந்த பங்களாவின் அருகில் செல்ல மக்கள் பயப்படுகின்றனர்.. அங்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் பல மர்மமான மற்றும் பயங்கரமான சம்பவங்கள் நடைபெறுவதாக கூறுகின்றனர்..