சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.. இதுதவிர சவுக்கு என்ற யூடியூப் சேனலையும் அவர் நடத்தி வருகிறார்.. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று கூறியிருந்தார்.. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.. மேலும், சவுக்கு சங்கர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் கடந்த 1ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான சவுக்கு சங்கர், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டிருந்தார்.. இதையடுத்து இந்த வழக்கு கடந்த 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.. அப்போது, நீதிபதிகள் “நீதிபதிகளுக்கு ஒன்றுமே தெரியவில்லை.. ஒரு மூத்த வழக்கறிஞர், வழக்கில் ஆஜராகிறார்.. அவரே தீர்ப்பையும் எழுதுகிறார்.. என நீதிபதிகள், நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசி உள்ளீர்கள்..” என்று நீதிபதிகள் கூறினர். தனக்கு இதுகுறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று சவுக்கு சங்கர் கோரினார்.. அப்போது நீதிபதிகள். பேட்டி கொடுத்த உங்களுக்கு பதில் தெரியாதா..? தெரிந்தே தான் பேசினீர்களா..” என கேள்வி எழுப்பினர்.
பல பேட்டிகள் கொடுப்பதால் தனக்கு ஞாபகம் இல்லை என்று சவுக்கு சங்கர் கூறினார்.. ஆனால், நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக ஊடகங்களில், சமூக ஊடகங்களில் பதிவு செய்ய மாட்டேன் என்று உறுதி கூறுங்கள் என்று நீதிபதிகள் கேட்டனர்.. எனினும் பேட்டியளிக்க மாட்டேன் என்று உறுதி கூற இயலாது என்று சவுக்கு சங்கர் கூறிவிட்டார்.. இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.. அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது.. சவுக்கு சங்கரும் ஆஜராகி இருந்தார்.
நீதித்துறை உத்தரவுகளை விமர்சிக்க உரிமை உண்டு. பேச்சுரிமை அதற்கான உரிமையை வழங்குகிறது என சவுக்கு சங்கர் தரப்பு வாதிட்டது. இந்நிலையில், வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.