ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் ஊழியர்களை மாற்ற பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
திமுக அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பேற்ற நாள் முதல் அந்த துறையில் புது புது மாற்றங்களும், அதிரடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் இடம் மாறுதல்கள் அனைத்தும் கவுன்சிலிங் மூலம் மட்டுமே நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை மாற்ற பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் நரேஷ் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறைக்கு தொடர்புடைய அலுவலகங்களில் புகார்கள் எழுவதை தடுக்கும் நோக்கத்திலும், ஊழியர்கள் புதிய உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், பள்ளிக்கல்வித்துறை உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தட்டச்சர்கள், இளநிலை உதவியாளர்கள், ஆகியோருக்கு இனி கலந்தாய்வு மூலம் மட்டுமே மாறுதல் வழங்கப்படும்.
இந்நிலையில், முதற்கட்டமாக பள்ளிக்கல்வித்துறை நிதிக்காப்பாளர்களுக்கு வரும் 27ஆம் தேதி இடம் மாறுதலுக்கான கவுன்சிலிங் நடைபெற இருக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் 30ஆம் தேதி வரை மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், பள்ளிக்கல்வித்துறை உதவியாளர்கள், உள்ளிட்டோருக்கு கவுன்சிலிங் மூலம் பணியிட மாறுதல் வழங்கப்படவுள்ளது. பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய மாற்றமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, முழுக்க முழுக்க கவுன்சிலிங் மூலம் மட்டும் இடம் மாறுதலை கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை உறுதியாக இருப்பதால், இடைத்தரகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.