விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகேயுள்ள கிளியனூர் கிராமம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (32) இவரது மகள் சஞ்சனா (5). இந்த நிலையில் சஞ்சனாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுகுமார், தைலாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சஞ்சனாவை அனுமதித்தார். அங்கு சஞ்சனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதும் சஞ்சனாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது, இதனால் சஞ்சனாவை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தார்.
ஜிப்மர் மருத்துவமனையில் சஞ்சனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சுகுமார் தனது மகள் சஞ்சனாவுக்கு தைலாபுரம் மருத்துவமனையில் பணிபுரியும் கணேஷ் சரியான சிகிச்சை அளிக்காததால் எனது மகளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது என்று கூறி கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட கிளியனூர் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக, ஆத்திரமடைந்த சுகுமார் தனது உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோரை திரட்டி, புதுச்சேரி-திண்டிவனம் நான்கு வழி சாலையில் உள்ள தைலாபுரத்தில் இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டகுப்பம் உதவி ஆணையர் மித்ரன் கிளியனூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான காவல்துறையினர் சாலை மறியல் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.