இந்தியாவில் போலியான IMEI எண்களுடன் லட்சக்கணக்கான ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஃபீச்சர் போன்கள் இருப்பதாக கூறப்படுகிறது.. இதனை தடுக்கவும் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் மத்திய அரசு புதிய விதியை கொண்டு வந்துள்ளது.. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1, முதல் அனைத்து மொபைல் ஃபோன் உற்பத்தி நிறுவனங்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு மொபைல் போனின் IMEI எண்ணையும், அதனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முன்பு, இந்திய போலி சாதனக் கட்டுப்பாடு போர்ட்டலில் (https://icdr.ceir.gov.in) பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது..
இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மொபைல் போன்களும் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கக்கூடிய முறையான IMEI எண்ணைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதே புதிய விதியின் நோக்கமாகும். மேலும் இந்த நடவடிக்கை ஸ்மார்ட்போன்கள் அல்லது ஃபீச்சர் போன்கள் தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால் அதைத் தவறாகப் பயன்படுத்தாமல் தடுக்க உதவும். இது இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் கருப்பு சந்தைப்படுத்துதலை தடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்ஃபோன்களுக்கு மட்டுமல்ல, மேட்-இன்-இந்தியா ஃபோன்களுக்கும், டாப்-எண்ட் ஐபோன்கள், சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் போன்றவற்றுக்கும் இந்த விதி பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. விற்பனை, சோதனை, ஆராய்ச்சி அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மொபைல் ஃபோனின் சர்வதேச மொபைல் சாதன அடையாள எண் இறக்குமதியாளரால் இந்திய போலி சாதனக் கட்டுப்பாட்டு போர்ட்டலில் (https://icdr.ceir.gov.in) பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ IMEI சான்றிதழ்களை பதிவு செய்வதற்கும் உருவாக்குவதற்கும் இந்த புதிய அமைப்பை https://icdr.ceir.gov.in என்ற இணைய போர்டல் மூலம் அணுகலாம். தற்போது இந்த இணைய போர்டல் மூலம் IMEI சான்றிதழ்களை பதிவு செய்வதற்கும் உருவாக்குவதற்கும் கட்டணம் ஏதும் இல்லை.
வேறு ஏதேனும் ஆதாரங்கள் மூலம் பெறப்பட்ட/உருவாக்கப்பட்ட/வழங்கப்பட்ட IMEI சான்றிதழ்கள் சட்டவிரோதமானது என்றும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட இணைய போர்டல் மூலம் பதிவு மற்றும் IMEI சான்றிதழ் உருவாக்கும் செயல்முறைக்கு விண்ணப்பதாரருக்கு உதவ எந்தவொரு முகவரையும் அல்லது மூன்றாம் தரப்பினரையும் அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை / நியமிக்கவில்லை..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
IMEI எண் ஏன் முக்கியம்..? IMEI என்பது தனித்துவமானது.. மேலும் இது குற்றவாளிகளை கண்காணிக்கப் பயன்படுகிறது. நிங்கள் புதிய ஃபோன் வாங்கினாலும் அல்லது நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் போனிலும் IMEI எண் உள்ளதா இல்லையா என்பதை எப்போதும் சரிபார்க்கவும். IMEI எண் இல்லாத எந்த சாதனமும் போலியானது, நீங்கள் அதை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும், IMEI எண்ணைச் சரிபார்க்க, விவரங்களைப் பெற *#06# ஐ டயல் செய்யுங்கள். இரட்டை சிம் ஸ்மார்ட்போன்களுக்கு, இரண்டு தனித்துவமான IMEI எண்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..