புதுச்சேரி, ஏனாம் அருகே கடந்த 24-ஆம் தேதி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேட்டகருவில் இருக்கும் தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்த அந்த பகுதியை சேர்ந்த பெட்டிரெட்டி கோவிந்து மற்றும் சல்லாடி சதிஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து காவல்துறையினர் 1 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த ரீத்து பிரகாஷ், சிந்தாலா யாமினி பிரசாத் ஆகியோரிடம் இருந்து கஞ்சா வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை பிடிக்க ஏனாம் காவல்துறையினர் விசாகப்பட்டினம் சென்றனர். அதில் ரீத்து காவல்துறையினரை திரும்பிப் போகுமாறு சொல்லி அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளார்.
இதை தொடர்ந்து ரித்துவை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் மற்றொரு இளைஞரான சிந்தாலவையும் பிடித்து கைது செய்து அவர்களிடம் இருந்து 4 கிலோ எடையுள்ள கஞ்சா, 3 செல்போன்கள், அரிவாள் போன்றவைகளை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.