தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை 01.07.2022 முதல் வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எவ்வித நடவடிக்கையையும் திமுக அரசு எடுக்காததோடு, மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படியைக்கூட வழங்காமல் காலந்தாழ்த்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
விலைவாசி உயர்வு காரணமாக மக்களின் வாங்கும் சக்தி குறையும் போது விற்பனை குறைவு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, விலைவாசி உயர்வை ஈடுகட்ட அளிக்கப்படுவதே அகவிலைப்படி. இந்த அகவிலைப்படி உயர்வைகூட அதற்குரிய தேதியில் வழங்காமல் பின் தேதியிட்டு வழங்குவது மிகவும் வருத்தம் அளிக்கும் செயலாகும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்த தேதியிலிருந்து அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதே தேதியிலிருந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. ஆனால், தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, அரசு ஊழியர்களின் நண்பன் என்று சொல்லிக் கொண்டு அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் செயலை மேற்கொண்டு வருகிறது.
ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை தொடர்ந்து காலந்தாழ்த்தி வழங்குவது என்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, முதலமைச்சர் ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, அதாவது 34 விழுக்காட்டிலிருந்து 38 விழுக்காடாக ஜூலை 1 முதல் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், தொடர்ந்து காலந்தாழ்த்தி வழங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.