சென்னையில் டெங்கு காய்ச்சலால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் என்பவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 6 வயதில் ராகஸ்ரீ என்ற மகள் உள்ளார். 2-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 5-ம் தேதி சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். சிறுமி உயிரிழப்பு குறித்து மருத்துவமனை கேட்டபோது, அவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து தாம்பரம் மாநாகராட்சி அலுவலர்கள் அச்சிறுமியின் குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமி நாசனி தெளித்து சுத்தம் செய்ததோடு அப்பகுதியில் காய்ச்சல் முகாம் நடத்தி வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள்:
காய்ச்சல், உடல் சோர்வு, வயிறு வலி போன்ற அறிகுறிகள் தென்படும். குழந்தைகளின் உடலில் தடிப்புகள் ஏற்படும். கொசு கடித்தது போன்று புள்ளி, புள்ளியாக சிவப்பு நிறத்தில் தோன்றும். டெங்குவில் காய்ச்சல் குறையும்போது, இந்த தடிப்புகள் தெரிய ஆரம்பிக்கும். டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால், மூன்றாவது நாளில் காய்ச்சல் குறையத் தொடங்கும்.