திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி 5 மாத கர்ப்பிணி மனைவி உயிரிழந்ததை அடுத்து, உடலை புதைக்கும் குழியில் இறங்கி அகோரி போல நிர்வாண பூஜை செய்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் சின்ன பசிலிகுட்டை என்ற பகுதியில் வசித்து வருபவர் ராஜாதேசிங்கு. இவரது மனைவி பூர்ணிமா (25). கடந்த 4 வருடங்கள் முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இப்போது 5 மாத கர்ப்பிணியாகவும் பூர்ணிமா இருந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று அருகில் உள்ள மாட்டு கொட்டகையை பூர்ணிமா வாட்டர் சர்வீஸ் செய்யும் கருவியை வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கருவியில் இருந்து மின்சாரம் தாக்கிவிட்டது. இதனால் பூர்ணிமா தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பூர்ணிமா உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்ய திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போஸ்ட் மார்ட்டம் முடிந்ததும், பூர்ணிமாவின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்கள் முன்னிலையில், அடக்கம் செய்ய மயானத்தில் குழி தோண்டப்பட்டது. அந்த நேரம் பார்த்து, பூர்ணிமாவின் கணவர் ராஜதேசிங்கு, திடீரென குழி முழுவதும் உப்பை எடுத்து கொட்டினார். பிறகு, அந்த குழியில் திடீரென நிர்வாணமாக குதித்தார். உடனே அந்த குழியிலேயே பூஜையும் செய்ய தொடங்கினார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் பயந்து போய்விட்டனர்.

இதுகுறித்து அந்த ஊர் மக்கள் கூறும் போது, சில வருடங்களுக்கு முன்பு, இந்த ராஜதேசிங்கு சாமியார் போல் மாறினாராம். அப்போது தன்னை ஒரு சிவபக்தர் என்று சொல்லி வந்தாராம். அதனால்தான், மனைவியின் உடலை புதைக்கும்போது, குழியில் இறங்கி தன்னை அகோரி போல நினைத்து பூஜை செய்துள்ளார். இதை பார்த்து பலர் பயந்துவிட்டனர் என்று சொல்கிறார்கள்.