திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருக்கின்ற காட்டூர் பாப்பாகுறிச்சியை சார்ந்தவர் அசோக்குமார்(42). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அசோக்குமார் அதே பகுதியில் இருக்கின்ற 21 சென்ட் விவசாய நிலத்தை சொந்தமாக வாங்கி பத்திரப்பதிவு செய்ய திருவெறும்பூர் ரிஜிஸ்டர் ஆபீஸில் விண்ணப்பம் செய்திருக்கிறார்.
அப்போது சார்பதிவாளர் பாஸ்கரன் அந்த நிலத்தை அரசு மதிப்பீட்டின் அடிப்படையில் சதுர அடியில் தான் பதிவு செய்ய இயலும் எனவும், விவசாய நிலமாக பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்றால் தனக்கு 1 லட்சம் ரூபாய் லஞ்சமாக வழங்க வேண்டும் எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர் அசோக்குமார் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் வழங்கி இருக்கிறார்.
இந்த புகாரின் அடிப்படையில், நேற்றைய தினம் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அனுமதியுடன் அசோக்குமார் வழங்கிய 1 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பெற்றுக்கொண்ட போது பாஸ்கரனை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடியாக கையும், களவுமாக பிடித்து கைது செய்து இருக்கிறார்கள்.