முன்பெல்லாம் பெண் வீட்டில் தங்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் ஒன்று வீட்டை விட்டு வெளியேறி தான் விருப்பப்பட்ட ஆணுடன் திருமணம் செய்து கொள்வார்கள். இல்லையெனில் பெற்றோர்களின் சம்மதத்திற்காக காத்திருந்து அவர்களை சம்மதிக்க வைத்து அதன் பிறகு இரு வீட்டாரின் சம்மதத்துடனும் திருமணம் நடைபெறும்.
ஆனால் தற்போதைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் புது வகையான திட்டத்தை கையாள தொடங்கி உள்ளார்கள்.அதாவது தெலுங்கானா மாநிலம், ராஜண்ணா ஸ்ரீசில்லா மாவட்டம், முட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரய்யா இவருடைய மகள் ஷாலினி.ஷாலினி ஜான் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த திங்கள் கிழமை அன்று அதே பகுதியில் இருக்கின்ற ஒரு கோவிலுக்கு தந்தையும் மகளும் சென்றனர்.
பின்பு சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு இருவரும் கோவிலை விட்டு வெளியே வந்தனர். அப்போது அங்கே காருடன் காத்திருந்த 4 பேர் கொண்ட ஒரு கும்பல் சந்திரய்யாவை தள்ளி விட்டுவிட்டு ஷாலினியை ஒரு காரில் கடத்திச் சென்றனர். தன்னுடைய மகளை கடத்திச் செல்பவர்களை தடுப்பதற்கு சந்திரய்யா முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை அதன் பிறகு இருசக்கர வாகனத்தில் அவர்களை பின்தொடர்ந்து சென்றும் அவர்களை பிடிக்க இயலவில்லை.
ஆகவே இது குறித்து சந்திரய்யா காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த பகுதியின் இருக்கின்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பெண்ணின் தந்தையை தள்ளிவிட்டு அந்த பெண்ணை கடத்திச் செல்லும் வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தனர்.
ஷாலினியை தேடும் பணியில் காவல்துறையினர் ஒருபுறம் மூழ்கி இருக்க, கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட ஷாலினி திருமண கோலத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தானும், ஜான் என்பவரும் கடந்த 4 வருட காலமாக காதலித்து வருவதாகவும், ஆனால் தங்களுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எங்களுடைய காதலை ஏற்றுக் கொள்ளால்தான் திட்டமிட்டு கடத்தல் நாடகத்தை நடத்தியதாகவும் கூறியுள்ளார்.
இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து ஷாலினியின் தந்தை சந்திரய்யா அதிர்ச்சியில் உறைந்துள்ளார். மேலும் குடும்பத்தினர் காதலை ஏற்க மறுத்ததன் காரணமாக, கடத்தப்படுவதை போல நாடகமாடி காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.