இந்தியாவில் ஒமைக்ரான் மாறுபாடு கொரோனா பி.எஃப் 7 வகை கண்டறியப்பட்டு உள்ளது.
சீனாவில் காணப்பட்ட ஒமைக்ரான் மாறுபாடு கொரோனா பி.எஃப் 7 வகை திரிபு வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம், வதோதரா மற்றும் அகமதாபாத் நகரங்களில் 2 பேர், ஒடிசாவில் ஒருவர் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா பி.எஃப். 7 திரிபு வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒமைக்ரான் மாறுபாடு கொரோனா பி.ஏ. 5.2 மற்றும் பி.எஃப். 7 கொரோனா வகைகள், முன்பு பரவிய ஒமைக்ரான் பி.ஏ.5 வகையின் துணை திரிபு என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கண்டறியப்பட்டுள்ள பி.ஏ.5.2 மற்றும் பி.எஃப் 7 வகை திரிபுகள் கொரோனா மாறுபாடுகளிலே மிக மோசமானது என்றும், தீவிரமாக பரவும் தன்மை கொண்டது என்றும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் அதிகளவில் பரவும் திறன் கொண்டது என்றும் மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த மாறுபாடு, அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஏற்கெனவே கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாறுபாட்டை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளது. முன்பு போல மக்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது இடங்களில் மக்கள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் என்கின்ற உத்தரவையும் மத்திய அரசு பிறப்பித்துள்ளது.