தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் அடித்த இரட்டை சதத்தை மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடியபோது அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா தொடக்க வீரரான டேவிட் வார்னருக்கு 100-வது டெஸ்ட் ஆகும். பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 189 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, கவாஜா 1 ரன்னிலும், லபுஸ்சேன் 14 ரன்னிலும் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர். ஆனால், வார்னருடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் இணை சிறப்பாக ஆடி ரன்களை குவித்தது. இதில், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் வார்னர் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் தனது 25-வது சதத்தை பதிவு செய்தார். மேலும், ஆஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்த 8-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்நிலையில், 2-வது நாளான ஆட்டம் தொடங்கியதும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் இரட்டை சதமடித்தார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த வார்னர், இரட்டை சதம் அடித்ததன் மூலம், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவரது 3-வது இரட்டை சதம் இதுவாகும். 100-வது டெஸ்ட்டில் இரட்டை சதமடித்த மகிழ்ச்சியை தனது வழக்கமான பாணியில் ஆக்ரோஷமாக குதித்து கொண்டாடினார் வார்னர். அப்போது, குதித்து தரையில் லேண்ட் ஆகும்போது கால் பிசகியதால் காலில் காயம் ஏற்பட்டது. அதனால் அவரால் தொடர்ந்து ஆட முடியவில்லை. இரட்டை சதத்தை கொண்டாடும்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக களத்தைவிட்டு வெளியேறினார் வார்னர்.