கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாடிவிட்டு சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் , கிறிஸ்மஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து, சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக, வரும் 01.01.2023 அன்று வரை நெல்லை, நாகர்கோவில், மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு. சேலம் மற்றும் திருச்சி ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 600 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கோவை , ஈரோடு, புதுச்சேரி ஆகிய நகரங்களுக்கும், தினமும் இயக்கக் கூடிய பேருந்துகளுடன், கூடுதல் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க அனைத்து போக்குவரத்துக் கழகங்களும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![தீபாவளி..!! சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்..!! சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2021/09/SETCBus750.jpeg)
எனவே அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் போதுமான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பொதுமக்களின் பயணங்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களின் மூலமாக முன்பதிவு செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த சேவையினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.