பெரியபாளையம் பகுதியில் உள்ள திராவிட பாலு எனபவர் திமுகவின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஒன்றியச் செயலாளராகவும் இருந்தவர். இவர் கடந்த 2013ம் ஆண்டு பெட்ரோல் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதையடுத்து எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக திராவிட பாலுவின் தம்பி சத்தியவேலு பதவி வகித்து வருகிறார். இதனால் இறந்த திராவிட பாலுவின் மகன் முருகன் (42) வீட்டுக்குள் சத்திய வேலுவின் மகன் புவன்குமார் என்கிற விஷால் புகுந்து பிரச்சினை செய்துள்ளார்.
அப்போது அவரது அண்ணன் முருகன், மனைவி ரம்யா (32), பெரியம்மா செல்வி (52), முருகன் மகன் கருணாநிதி (15) ஆகியோரை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கிவிட்டு ஓடினர். பின்னர் அவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தலையில் பலத்த காயம் அடைந்த ரம்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், காயமடைந்த செல்வி, முருகன், கருணாநிதி ஆகிய 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரம்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குடும்பத் தகராறு, சொத்து தகராறு, வேறு ஏதேனும் காரணங்களால் கொலை நடந்ததா என பெரியபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள புவன்குமாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.