அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ‘ஹிண்டன்பர்க்’ சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் தொடர்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டதாகவும், அந்த நிறுவனம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. மிக அதிக அளவில் கடன் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தது.

தற்போது நடைபெற்று வரும் ஹிண்டன்பர்க்-அதானி பிரச்சனைக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி இன்று நாடாளுமன்றத்தை புறக்கணித்து போராட்டங்களை நடத்தவுள்ளது. ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) அலுவலகங்கள் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளைகள் முன்பு நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் எஸ்பிஐ அலுவலகம் மற்றும் எல்ஐசி அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்துவார்கள், இதில் மாநிலங்களின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரஸ் எம்பிக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அதானி விவகாரத்தில் மற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவு காங்கிரஸுக்கு கிடைத்தாலும், கூட்டங்களில் ஒன்றாகக் காணப்படும் பாரத் ராஷ்டிர சமிதி, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் காங்கிரசுடன் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.