சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க இடிபாடுகளுக்குள் பிறந்த பெண் குழந்தையை தத்தெடுக்க ஆயிரக்கணக்கானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, இடிந்து விழுந்த ஆயிரக்கணக்கான கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்கள் ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சில இடங்களில் உயிருடன் அல்லது சடலமாக மீட்கப்படுபவர்கள் குறித்து சுவாரஸ்ய தகவல்களும் வெளியாகிவருகிறது. அந்தவகையில், சிரியாவின் ஜிண்டேரிஸ் நகரத்தில் ஏற்பட்ட நிலநடுக்க இடிபாடுகளுக்கிடையே பிறந்த பெண் குழந்தையை தொப்புள் கொடியுடன் மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். இதில், குழந்தையின் தாய், தந்தை மற்றும் 4 சகோதரர்களும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்த குழந்தைக்கு அயா என்று பெயரிடப்பட்டுள்ளது. அயா என்பது (அரபு மொழியில் அதிசயம் எனப் பொருள்).
இடிபாடுகளில் இருந்து மீட்கப்படும்போது, காயங்களுடன் அயாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாகவும், உடல் குளிர்ச்சியாகவும், சரியாக சுவாசிக்க முடியாமலும் இருந்ததாகவும். ஆனால் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் குழந்தை மருத்துவர் ஹானி மரூஃப் கூறினார். அயாவை மீட்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது
இந்தநிலையில், தற்போது சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கானோர் அயாவை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்து, அவளது விவரங்களைக் கேட்டுவருகின்றனர். ஆனால், அயாவின் உறவினர்கள் வரும் வரை அவளை தத்தெடுக்க அனுமதிக்கமாட்டேன் என்றும் நான் அவளை என் சொந்தப் பெண்ணாகப் பார்த்துக்கொள்வேன் என்றும் அந்த குழந்தை சிகிச்சை பெறும் மருத்துவமனை மேலாளர் காலித் அட்டையா தெரிவித்துள்ளார். மேலும், அட்டையாவின் மனைவி தனது சொந்த மகளோடு சேர்த்து அயாவுக்கும் தாய்ப்பால் கொடுத்துவருவது சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது.