சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், பம்மல் பகுதிகளில் சமீபகாலமாக விபச்சார தொழில் கொடிகட்டி பறந்து வருகிறது. முன்பெல்லாம் விபச்சார தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கென புரோக்கர்களை வைத்திருப்பார்கள். அந்த புரோக்கர்கள் தான் நேரடியாக சென்று, பார்ட்டிகளை அழைத்து வருவர். ஆனால், தற்போது விபச்சார தொழிலில் ஈடுபடுபவர்கள், தங்களுக்கென்று புரோக்கர்கள் யாரையும் வைத்துக் கொள்ளாமல், ஆன்லைன் மூலம் தங்களது செல்போன் எண் மற்றும் லோக்கேஷனை வெளிப்படையாக தெரியப்படுத்தி, இளைஞர்களின் ஆசையை தூண்டிவிடுகின்றனர். இதில், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை என்று ரூ.1,500 முதல் ரூ.25,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா என மாநிலத்தை சேர்ந்த பெண்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கேற்ப விலையும் இருக்கும். மேலும், டோர் ஸ்டெப் சர்வீஸ் வசதியும் உண்டு. வாடிக்கையாளர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று பகிரங்கமாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் அழகிய பெண்களின் புகைப்படம் என்று சில புகைப்படங்களையும் முகப்பில் தெரியும் படியாக வைத்துள்ளனர். முன்பெல்லாம் சமூகத்திற்கு பயந்து இலை மறை காயாக இருந்து வந்த விபச்சாரம், தற்போது தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள அசூர வளர்ச்சி காரணமாக, ஆன்லைனில் விளம்பர படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சபல புத்தியுடைய இளைஞர்கள் பலர், இதில் சிக்கி தங்களது பணத்தை மட்டுமின்றி வாழ்க்கையையும் தொலைத்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து எவ்வித புகாரும் வராததால், போலீசாரும் நடவடிக்கை எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போதைய நவீன உலகில் இளைஞர்களே செல்போன்களை அதிகமாக பயன்படுத்தி வருவதால், இதுபோன்ற மோசடி கும்பலின் குறிக்கோள், பள்ளி, கல்லூரி மாணவர்களைத்தான் வலையில் வீழ்த்துகின்றனர். இதுபோன்ற விபச்சார ஆன்லைன் என்ற பெயரில், ஆசைவார்த்தை கூறி சில கும்பல், இளைஞர்களிடம் பணமும் பறித்து வருகிறது. எனவே விபச்சார தடுப்பு பிரிவு போலீசார், இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, இது போன்ற ஆன்லைன் விபச்சார மோசடி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.