தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில் வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது தவிர விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் நுகர்வோர்கள் குறித்த முறையான தகவல்களை பெறும் நோக்கில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. அதன்படி, கடந்தாண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், இறுதியாக ஜனவரி 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பிறகு நாளை (பிப்ரவரி 15) வரை மின் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காமல் உள்ள மின் நுகர்வோர்கள் விரைந்து பணியை முடிக்க வேண்டும் என மின்சாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.