பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தது திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது… தாவணிக் கனவுகள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான மயில்சாமி, தூள், கில்லி, நான் அவன் இல்லை, தேவதையை கண்டேன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.. குறிப்பாக நடிகர் விவேக் உடன் இணைந்து மயில்சாமி நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடம் பிரபலமடைந்தன..

இந்நிலையில் சிவராத்திரியை ஒட்டி, சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு மயில்சாமி சென்றுள்ளார்.. சிவராத்திரி பூஜையில் பங்கேற்று வீடு திரும்பும் வழியில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.. ஆனால் மயில்சாமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்..
தீவிர சிவபக்தரான மயில்சாமி, சிவராத்திரி அன்றே மறைந்து விட்டார் என்று சக நடிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. மேலும் அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பல்வேறு பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. இந்நிலையில் மயில்சாமி கடைசியாக பேசிய டப்பிங் வீடியோ வெளியாகி உள்ளது.. கிளாஸ்மேட்ஸ் என்ற படத்திற்காக அவர் டப்பிங் பேசியுள்ளார்.. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..