செங்கல்பட்டை சார்ந்த சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் மரணமடைந்த சம்பவத்தில் மூன்று மாதங்கள் கழித்து ஆறு காவலர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்துள்ள கன்னடபாளையம் குப்பைமேடு பகுதியைச் சார்ந்தவர் பிரியா. இவரது கணவர் பழனிச்சாமி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஆறு குழந்தைகள். பிரியாவின் மூத்த மகன் கோகுல் ஸ்ரீ வயது 17. திருட்டு வழக்கு சம்பந்தமாக ஆறு மாதம் சிறை தண்டனை பெற்ற சிறுவன் டிசம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். இந்நிலையில் தாம்பரம் ரயில்வே போலீசாரின் எல்லைக்குட்பட்ட பகுதியில் தண்டவாளத்தில் பேட்டரி திருடியது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட கோகுல் ஸ்ரீ நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். டிசம்பர் 31ஆம் தேதி பிரியாவை தொடர்பு கொண்ட காவல்துறையினர் அவரது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் சிறிது நேரம் கழித்து அவரை தொடர்பு கொண்ட காவலர்கள் அவரது மகன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த பிரியா தனது மகனின் சாவில் மர்மமிருப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்திருந்தார். மேலும் சிறுவர் நீதிமன்ற காவலில் இருக்கும்போது இறந்ததால் நீதிபதியும் விசாரணையை மேற்கொண்டு வந்தார். சிறுவனின் உடற்கூறாய்வு நீதிபதி ரீனா முன்னிலையில் நடைபெற்றது. தற்போது விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார் நீதிபதி ரீனா. இதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட டிஎஸ்பி சிறுவர் சீர்திருத்த பள்ளியைச் சார்ந்த ஆறு காவலர்களை கைது செய்துள்ளனர். இந்த ஆறு காவலர்களும் சேர்ந்து கோகுல் ஸ்ரீயை அடித்துக் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுவர் சீர்திருத்த பள்ளியின் கண்காணிப்பாளர் மோகன் மற்றும் பணியிலிருந்த காவலர்கள் ஆனஸ்ட்ராஜ், சரண்ராஜ், வித்தியாசாகர், விஜயகுமார், சந்திரபாபு ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களின் மேல் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.