தனது செல்ல மகளை தந்தை ஒருவரே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெங்களூருவில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூருவைச் சார்ந்த ரமேஷ் மற்றும் சீதா தம்பதியினருக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்து அதன் பிறகு ஒரு மகள் பிறந்திருக்கிறார். எட்டு ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை என்பதால் தாயும் தந்தையும் மிகவும் செல்லமுடன் குழந்தையை வளர்த்திருக்கின்றனர். அந்தக் குழந்தையின் இஷ்டப்படியே எல்லாம் நடந்திருக்கிறது. இதனால் கண்டிப்பு என்பது ஒரு பேச்சுக்கு கூட இல்லாமல் தான்தோன்றித்தனமாக வளர்ந்து இருக்கிறார் அவர்களது மகள் ஆஷா. இதன் காரணமாக யாரையும் மதிக்காமல் எல்லாரையும் எடுத்தெறிந்து பேசி திமிருடனேயே நடந்திருக்கிறார் ஆஷா.
இதனை கண்டித்த தனது தாய் மற்றும் தந்தை ஆகியோரையே அடித்து உதைத்து துன்புறுத்தி வந்திருக்கிறார் . இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆஷா. திருமணமான சில நாட்களிலேயே தனது கணவரின் குடும்பத்துடன் வாழ பிடிக்கவில்லை எனக் கூறி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து வசித்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு அவரது போக்கு முற்றிலுமாக மாறி இருக்கிறது. தினமும் மது குடித்துவிட்டு இரவு நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு வருவது தாய் தந்தையுடன் அடிக்கடி சண்டை போடுவது மற்றும் அவர்களை அடித்து உதைப்பது என மிகவும் கொடுமை செய்திருக்கிறார் ஆஷா. இதனால் அவரது தந்தை தனக்கு இப்படி ஒரு மகளே வேண்டாம் என முடிவு செய்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த ஆஷாவை விறகு கட்டையால் அடித்தே கொலை செய்திருக்கிறார். பின்னாடி இது தொடர்பாக காவல்துறையை தொடர்பு கொண்ட அவர் நடந்த சம்பவங்களை விலக்கி கூறி சரணடைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறை ஆஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.