குடிமைப்பணி முதன்மை தேர்வுக்கு தயாராக 1000 மாணவர்களுக்கு ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.. இந்நிலையில் பட்ஜெட் தாக்கலுக்காக பேரவை இன்று மீண்டும் கூடியது.. திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்பான, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம்பெறும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அந்த திட்டத்துக்கான அறிவிப்பும், புதிய சில திட்டங்களுக்கான அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை இ பட்ஜெட்டாக தாக்கல் செய்து வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம் என்ற பெருமையுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன்.. பொருளாதார வளர்ச்சி, சமூக பாதுகாப்புக்கு தமிழக அரசு முக்கியத்துவம் தருகிறது.. நாங்கள் பதவியேற்கும் போது சுமார் 62,000 கோடி இருந்த வருவாய் பற்றாக்குறையை நடப்பாண்டில் சுமார் 30,000 கோடி அளவுக்கு குறைத்துள்ளோம்.. வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை படிப்படியாக குறைக்கப்படும்…
2006 முதல் 2011 வரை சராசரி 8 சதவீதமாக மாநிலத்தின் சொந்த வரிவருவாய், அடுத்த 10 ஆண்டுகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு, 2020-21-ல் 5.58 சதவீதமாக குறைந்தது.. கடந்த 2 ஆண்டுகளாக இந்த அரசு எடுத்த முயற்சிகளின் பலனாக இந்த விகிதம் 6.11 சதவீதமாக உயர்ந்துள்ளது..” என்று தெரிவித்தார்..
2023-24 தமிழக பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் :
- தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
- தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்
- மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராஜன் ஆகியோருக்கு நினைவிடம் அமைக்கப்படும்
- அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்
- இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு 7,000 வீடுகள் கட்ட, ரூ.233 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
- வயது முதிர்ந்த 591 தமிழ் அறிஞர்களுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்படும்
- கிண்டியில் அமைக்கப்பட்டு வரும் ‘கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை’ இந்த ஆண்டு திறந்துவைக்கப்படும்.
- 211 தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ‘ மக்களை தேடி மருத்துவம் திட்டம்’ விரிவுப்படுத்தப்படும்
- பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு
- தமிழ்நாட்டை சேர்ந்த படைவீரர்கள் குடுபத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை இருமடங்காக , ரூ. 40 லட்சமாக உயர்த்தப்படும்.
- குடிமைப்பணி தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக ரூ.7,500 உதவித்தொகை வழங்கப்படும்.
- குடிமைப்பணி முதன்மை தேர்வுக்கு தயாராக 1000 மாணவர்களுக்கு ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்படும்