திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகரில் வசித்து வருபவர் சதாசிவம் வயது 43. திமுக ஒன்றிய துணைச் செயலாளரான சதாசிவம் அப்பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி அனிதா வயது 38. இவர் குனிச்சி மோட்டூர் பகுதியில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சதாசிவம் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. இது தொடர்பாக இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
அடிக்கடி தகராறு ஏற்பட்டு சண்டை நடந்து வந்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார் அனிதா. இதற்காக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பத்தூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் பெண் உடல் கிடப்பதாக வந்த தகவலையடுத்து ரயில்வே போலீசார் அங்கிருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையின் விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட பெண் பள்ளி ஆசிரியை அனிதா என தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. குடும்ப பிரச்சினையினால் பள்ளி ஆசிரியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.