கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரபெருமாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் என்பவரின் மகன் சரவணன். இவர் திருப்பூரில் இருக்கின்ற ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் பணியாற்றி வந்த அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் கண்மணி இவர்கள் இருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
நாட்கள் செல்ல, செல்ல அவர்களுக்கு இடையிலான இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. ஆகவே இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி தங்களுடைய காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி வீரபெருமாநல்லூர் சிவன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இருவரும் சரவணனின் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இத்தகைய நிலையில், கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இடையே தகராறு உண்டாகி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், கடந்த 23ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த கண்மணி விஷம் குடித்துள்ளார். ஆகவே சற்று நேரத்தில் அவர் மயங்கி விழுந்ததால் அவரை உறவினர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வந்தார்கள். இருந்தாலும் சிகிச்சை பலனின்றி கண்மணி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் கண்மணியின் தந்தை சேகர் தன்னுடைய மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் முழுமையாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருந்தார்.
ஆகவே காவல்துறையினர் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன அதோடு திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் உயிரிழந்ததால் கடலூர் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.