கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 3000-ஐ கடந்துள்ளது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது…
இந்நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.. ஒரே நாளில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 578ஆக அதிகரித்துள்ளது.. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மொத்த எண்ணிக்கை 4,953 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் என்ணிக்கை ஒரே நாளில் நூற்றுக்கணக்கில் அதிகரித்ததை அடுத்து, மாநில சுகாதாரத் துறை சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள சுகாதாரத்துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் “ நீரிழிவு, இரத்த அழுத்தம், புற்றுநோய், இதயம் அல்லது சிறுநீரக நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிய வேண்டும்.. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுள்ளது.. மருத்துவமனைகளுக்கு நோயாளிகளுடன் வருபவர்களும் மருத்துவமனைகளில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் உள்ளவர்களுக்கு இன்ஃப்ளூயன்ஸா அல்லது கொரோனாவின் பிற அறிகுறிகள் ஏற்பட்டால், ஆர்.டி பி.சிஆர் சோதனைகளை எடுக்க வேண்டும். ஆஷா பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கர்ப்பிணிப் பெண்களிடம் நோயின் அறிகுறிகளை பரிசோதித்து, சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்..
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். வேறு காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானால், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். இதை அனைத்து மருத்துவமனைகளும் பின்பற்றுவதை மாவட்ட மருத்துவ அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..