கேரளாவில் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த நபர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளார்..
கடந்த 3-ம் தேதி இரவு ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்தனர். 9 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.. அப்போது ரயிலில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட அதில் ஒரு பயணி அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார். அந்த நேரத்தில் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து கேரள காவல்துறை, ரயில்வே காவல்துறை, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கேரள ரயிலில் தீ வைத்த நபருடையது என சந்தேகிக்கப்படும் பை ஒன்றை கைப்பற்றி காவல்துறை சோதனை செய்தனர்.. அந்த பையில் இருந்த டைரியில் ஹிந்தி, ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள குறிப்புகள் கிடைத்தது.. அதில், கன்னியாகுமரி, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்ததால் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
மாவோயிஸ்டுகள் செயலா அல்லது பயங்கரவாதிகளின் சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.. இதை தொடர்ந்து போலீசார் குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் நபரின் வரைபடத்தை வெளியிட்ட போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தினர்..
இந்த விசாரணையில், ஷாருக் சைபி என்பவர் இந்த ரயிலில் பயணம் செய்ததும், அவர் தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்றும் தெரியவந்தது.. அவர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. இந்நிலையில் மத்திய உளவுத்துறை மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையினர் தலைமறைவான ஷாருக் சைஃபியை மகாராஷ்டிராவின் ரத்னகிரி ரயில் நிலையத்தில் நேற்றிரவு கைது செய்தனர்..
அவர் தற்போது ரத்னகிரியின் ரயில்வே பாதுகாப்புப் படையின் (RPF) காவலில் உள்ளார்.. அவரை பிடிக்க கேரள போலீசாரும் ரத்தினகிரிக்கு சென்றுள்ளனர்.. கைது செய்யப்பட்ட ஷாருக் சைஃபி மனநலம் சரியில்லாதவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.. கேரள ரயிலில் மக்கள் மீது தீ வைக்கும்படி தன்னிடம் சிலர் சொல்லியதாகவும், அதனால் தீ வைத்ததாகவும் ஷாருக் சைஃபி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் இறுதி விசாரணைக்குப் பிறகு விவரம் தெரியவரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.