ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற கவுரவக் கொலை நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்தப் பெண்மணியின் சகோதரர்கள் தப்பித்துள்ளனர். ஹரியானா மாநிலத்தின் ரோக்தக் பகுதியைச் சார்ந்த நிதி பராக் என்ற 20 வயது பெண்ணும் தர்மேந்தர் பராக் என்ற 22 வயது இளைஞனும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த இந்த ஜோடி வீட்டிலிருந்து வெளியேறி டெல்லிக்கு சென்று இருக்கிறார்கள். இதை எப்படி அறிந்து கொண்ட அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு வந்துள்ளனர். தங்கள் இருவரையும் எந்த கொடுமையும் செய்யக்கூடாது என்று சத்தியம் செய்த பின்பே தங்களது பெற்றோருடன் வந்திருக்கிறது காதல் ஜோடி.
இந்நிலையில் ஊருக்கு வந்து சேர்ந்ததும் கிராமத்தில் எல்லோருக்கும் முன்பாக அந்தப் பெண்ணை அடித்தே கொலை செய்து இருக்கிறார்கள் அவர்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர். மேலும் அந்த இளைஞரையும் அவரது பெற்றோர் கை கால்களை ஒடித்து தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். அவர்கள் இருவரையும் கொலை செய்த பின்பு சுடுகாட்டிற்கு எரிக்கச் சென்றுள்ளனர் அப்போது வந்த காவல்துறை அவர்களிடமிருந்து பாதி எரிந்த நிலையில் இருந்த இறந்த உடல்களை மீட்டுச் சென்றது. இது தொடர்பாக நடத்தப்பட்ட காவல்துறையின் விசாரணையில் கௌரவ கொலையாக இந்தச் சம்பவங்கள் நடந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இது பற்றி கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் தந்தையிடம் கேட்டதற்கு தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் தேவைப்பட்டால் மீண்டும் இதே போன்று செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அந்த இளைஞரின் குடும்பத்தினரும் இவ்வாறே தெரிவித்துள்ளனர். நாடு எவ்வளவோ முன்னேறி விட்ட நிலையிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.