இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000, 3000 என உயர்ந்து வந்த நிலையில் இன்று 6000-ஐ தாண்டியது… ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது…
இதன் காரணமாக பல மாநிலங்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.. அந்த வகையில் தற்போது புதுச்சேரியில், பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.. புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “ கடந்த சில வாரங்களாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒமிக்ரான் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.. எனவே புதுச்சேரி அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் கடற்கரை, சந்தை, பூங்கா, திரையரங்குகளில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதை நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும். கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் இந்த உத்தரவு பொருந்தும்..” என்று தெரிவித்தார்..