சமையல் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கு நிறுவனங்களும் ஒப்புக் கொண்டிருப்பதால் விரைவில் விலை குறைய வாய்ப்புள்ளது.
சமையல் எண்ணெய்களை உலகளவில் அதிகம் இறக்குமதி செய்யும் முக்கியமான நாடுகளில் ஒன்றான இந்தியா, 2021-22 நிதியாண்டில் (நவம்பர்-அக்டோபர்) ரூ.1.57 லட்சம் கோடி மதிப்புள்ள சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்துள்ளது. இந்தியா பொதுவாக மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் இருந்து பாமாயிலை வாங்குகிறது. சோயாபீன்ஸ் எண்ணெய்யை அர்ஜென்டினா மற்றும் பிரேசிலிடம் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்நிலையில், சமையல் எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கணிசமாக குறைந்துள்ள போதிலும் மக்களுக்கு இன்னும் போய் சேரவில்லை. பொதுமக்களுக்கு விலை உயர்வில் இருந்து நிவாரணம் அளிக்கும் விதமாக சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலை டன்னுக்கு 200 டாலர் முதல் 250 டாலர் வரை குறைந்துள்ளது. இதனை நுகர்வோருக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில் சமையல் எண்ணெயின் அதிகபட்ச சில்லறை விலையை (எம்ஆர்பி) குறைக்க நிறுவனங்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக கடந்த சில மாதங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் சமையல் எண்ணெய் வகைகள் மீதான அதிக ட்ச சில்லறை விலையை (எம்ஆர்பி) குறைத்துள்ளன. தற்போது மதர் டெய்ரி, தாரா பிராண்ட் லிட்டருக்கு ரூ.15-20 வரை விலைக் குறைப்பதாக அறிவித்துள்ளன.
திருத்தப்பட்ட எம்ஆர்பி கொண்ட தயாரிப்புகள் அடுத்த வாரம் சந்தைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசின் அறிவுறுத்தலையடுத்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களின் சங்கமும் (எஸ்இஏ) விலைக் குறைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தியது. இதனை ஏற்றுக்கொண்ட எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் விரைவில் சமையல் எண்ணெய் எம்ஆர்பி-யை குறைக்க முடிவு செய்துள்ளன. கடந்த ஓராண்டில் நிலக்கடலை எண்ணெய் ஒன்றுதான் விலை பெரிதாக குறையவே இல்லை. ஆனால் சூரிய காந்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் உள்பட அனைத்து வகையான சமையல் எண்ணெய்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் அனைத்துமே சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.10 முதல் 20 ரூபாய் வரை குறைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.