முட்டைகள் நீண்டநாள் கெட்டு போகாமல் தடுக்கும் முறைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
முட்டையில் பல்வேறு ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிரம்பியுள்ளன. புரதத்துக்கு சிறந்ததொரு ஆதாரம் முட்டை. முட்டை ஆம்லேட், பொடிமாஸ், ஆஃப்பாயில், கலக்கி, கரண்டி ஆம்லேட், சுருள் ஆம்லேட், பிரட் ஆம்லேட் என முட்டையில் பல்வேறு ரெசிப்பிகளும் வந்துவிட்டன. இதனால் மக்கள் இப்போது முட்டைகளை மொத்தமாக வாங்கி வீட்டில் வைத்து விடுகின்றனர். முட்டைகள் பொதுவாக நீண்ட நாட்கள் தாங்காது. ஆனால் பக்குவமாக அதை பராமரித்தால் முட்டைகளை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் தடுக்கலாம்.
முட்டையை வாங்குவதற்கு முன் நினைவில் வைத்து கொள்ள வேண்டிய விஷயங்கள்: முட்டையை காதுக்கு அருகில் வைத்து லேசாக குலுக்கி பார்க்க வேண்டும். உள்ளே வெடி சத்தம் கேட்டால் முட்டை கெட்டுப்போக வாய்ப்புண்டு. கடையில் இருந்து முட்டையை வாங்கி வந்த பின்பு அதை குளிர்ந்த நீரில் போடவும். முட்டை நீருக்குள் மூழ்கினால் அது நல்ல முட்டை. ஒருவேளை முட்டைகள் நீருக்கு மேலே மிதக்க ஆரம்பித்தால் அந்த முட்டைகள் கெட்டுப்போகத் தொடங்கியிருக்கக்கூடும். முட்டையை எடை போட்டு வாங்க வேண்டும். ஒரு முட்டை சாதாரண முட்டையின் எடையை விட குறைவாக இருந்தால், அதை வாங்குவதற்கு முன் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது.
குளிர்காலத்தில் முட்டைகளை நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக சேமிப்பதற்கு சணல் மூலம் செய்யப்பட்ட பைகளே சிறந்தது. இதற்கு முட்டையை அட்டைப்பெட்டியில் போட்டு அதை சணல் பையில் வைத்து மூடி சமதளமான இடத்தில் வைக்கவும். இதனால் முட்டைகள் சூடாக இருப்பதோடு, நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும். சிலர் முட்டைகளை பிளாஸ்டிக் பை மற்றும் அல்லது பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைப்பார்கள் . அது தவறான முறையாகும். முட்டைகள் கெட்டு போகாமல் இருக்க பானையில் வைத்து பராமரிக்கலாம். இதற்கு, ஒரு பெரிய பானையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் காய்ந்த புல்லை போட்டு சமமாக செய்து எல்லா முட்டைகளையும் அதன் உள்ளே வைத்து விடவும். முட்டைகளை வைத்த பிறகு அதன் மேல் மீண்டும் காய்ந்த புல்லை போட்டு இறுதியில் பானையை துணி அல்லது தட்டு போட்டு மூடி வைக்கவும். இப்படி செய்தால் இருபது நாட்களுக்கு மேல் முட்டைகள் கெட்டுப்போகாது.
மினரல் ஆயிலை பயன்படுத்துவது முட்டைகளை நீண்ட நாட்களுக்கு பராமரிக்க உதவுகிறது. இதற்கு முதலில் அனைத்து முட்டைகளிலும் மினரல் ஆயில் தடவவும். பின்பு அனைத்து முட்டைகளையும் சிறிது நேரம் வெயிலில் வைத்து, அதனை அட்டைப்பெட்டியில் போட்டு சமையலறையில் வைக்கவும். இதனால் ஒரு மாதத்துக்கு முட்டைகள் கெட்டுப்போவதில்லை. ஃப்ரிட்ஜில் வைத்தும் முட்டைகளை பராமரிக்கலாம். ஆனால் அட்டைப்பெட்டியில் வைத்து தான் முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது அமிலம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளான எலுமிச்சை, வெங்காயம் போன்றவற்றை அட்டைப்பெட்டியின் மேல் வைப்பதைத் தவிர்க்கவும்.