சினிமாவில் இனி 3 ஆண்டுகளுக்கு நடிக்கப் போவது இல்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெற்றார். இதனால் தம்மால் தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடியாது எனவும் உதயநிதி அறிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிக்கும் மாமன்னன் திரைப்படம்தான் தற்போதைக்கு தான் நடிக்கும் கடைசி படம் எனவும் கூறியிருந்தார்.
மாமன்னன் திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், இத்திரைப்படத்தை ஜூன் 29ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளோம். இயக்குநர் மாரி செல்வராஜ் படத்தில் எது எதிர்பார்க்கப்படுகிறதோ அது கண்டிப்பாக இருக்கிறது. கமல்ஹாசன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க திட்டமிட்டோம். ஆனால் ஒரு அமைச்சராக பதவி வகித்துக் கொண்டு நடித்துக் கொண்டு இருப்பது சரியாக இருக்காது என்பதால் கைவிட்டுவிட்டோம்.
எனக்கு தெரிந்து இதுதான் கடைசி படம் என நினைக்கிறேன். அப்படியான ஒரு கடைசி படம் நல்ல படமாக அமைந்ததில் மகிழ்ச்சி, திருப்தி. அமைச்சராக இருக்கும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த சினிமாவிலும் நடிக்கப் போவதில்லை. அதற்கு பின்னர் எப்படி என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். அப்படி மீண்டும் நடித்தால் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பேன்” என்று தெரிவித்தார்.