கடந்த 2011ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்றம், பதவி உயர்வுகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு மத்திய அரசு, கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், 2011ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை எனக்கூறி, அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்தார். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, கடந்த 2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என உத்தரவிட்டது. ஊதிய உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.