பாஜகவுக்கு இந்த நாட்டுக்கான தியாக வரலாறு கிடையாது. மாறாக, சாவர்க்கர் உள்ளிட்டவர்களின் துரோக வரலாறு இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்திய விடுதலைப் போராட்டத்தில் கடுகளவு பங்கும் வகிக்காமல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு வெண்சாமரம் வீசி, ஆதரவாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம், பாஜக. பரிவாரங்கள் நீண்டகாலமாக மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட அப்பழுக்கற்ற தலைவர்களின் புகழை சிதைக்கிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை பிரதமர்களின் அருங்காட்சியகம் என பாஜக அரசு பெயரை மாற்றியிருக்கிறது.
இந்திய வரலாற்றுச் சுவடுகளை நினைவுபடுத்தும் வகையில் லட்சக்கணக்கான புத்தகங்களும், புகைப்படங்களும், ஆவணங்களும் பாதுகாக்கப்பட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் களஞ்சியமாக, கருவூலமாக விளங்குகிற நேரு நினைவு அருங்காட்சியகத்தின் முக்கியத்துவத்தையும், இளைய சமுதாயத்தினரின் பயன்பாட்டையும் சீரழிக்கிற வகையில் பாஜக அரசு இந்த முடிவை செய்திருக்கிறது.