கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததோடு நிதி உதவியையும் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம் மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் இன்று காலை பண்ருட்டியில் இருந்து கடலூருக்கு சென்ற தனியார் பேருந்து வலதுபுர முன் டயர் எதிர்பாராத விதமாக வெடித்து கடலூரிலிருந்து பண்ருட்டி நோக்கி வந்து கொண்டு இருந்த தனியார் பேருந்து மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதோடு பலர் படுகாயம் அடைந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதோடு இந்த செய்தியை கேள்வியுற்றவுடன் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று தேவையான மேற்கு நடவடிக்கைகளையும் மருத்துவ உதவிகளையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அதோடு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன் உள்ளிட்டோரை தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு நேரில் சென்று விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50000 ரூபாயும், மேலும் லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 25000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய அறிக்கையின் மூலமாக தெரிவித்து இருக்கிறார்.